Friday, August 13, 2010

என்னை பற்றி கொஞ்சம்..

அடிச்சு சொல்லுவேன், கல்கியே என் தமிழ் இலக்கிய ஆர்வத்தை தூண்டியவர் என்று.

பள்ளியில் படிக்கும்போது தமிழாசிரியர் ஏதோ பேசிட்டிருப்பார், நான் ஏதாவது நினைத்துக்கொண்டு இருப்பேன், சில சமையம் விட்டத்தையும் பார்பதுண்டு. இன்னும் நன்றாக நினைவிருக்கிறது, என் தமிழாசிரியரின் கடிதம் - என் குடும்பத்திற்கு. அவர் ஏதோ எனக்கு பெரிய திறமை இருக்குதுன்னு நினைச்சுட்டு, அதுக்கு என் எழுத்தும் நல்லா இருக்க வேண்டும் என்று ஆசைபட்டு, என் கையெழுத்தை செப்பனிட பயிற்சி அது இதுண்ணு ஒரு பெரிய கடிதம் எழுதினார். எனக்கே சிரிப்பாய் வந்தது, என் அக்கா அதை படித்தபோது. அவளுக்கும் ஆச்சர்யம் தான். இருக்காதா பின்னே!!!

ஆனாலும், தமிழ் பாடத்தில் வரும் செய்யுள்கள், காப்பியங்கள், திருக்குறள் என்று எனக்கு அனைத்தும் பிடிக்கும். நன்றாக மனப்பாடம் செய்து, அப்படியே பரிட்சையில் கொட்டுவேன். இப்போது நினைத்தால் அவை யாவற்றையும் நன்றாக படித்துருக்க கூடாதா என்று ஒரு ஏக்கம்.

பிறகு எங்கிருந்து அய்யா வந்தது இந்த தமிழ் ஆர்வம். முதலில் என் பெரிய அக்காவின் கணவர். அவருக்கு நிறைய நண்பர்கள் - அவர்களில் சிலர் நல்லா இலக்கிய திறமை மிக்கவர்கள். அடிக்கடி அவர்களை பற்றியும், சில பாடல்களை பற்றியும் பேசுவார். என்னடா இருக்கிறது இந்த தமிழில் என்று என்னை அது சிந்திக்க வைத்தது. ஆனால் அதிகம் படிக்க சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது. அதற்கு காரணம், என் படிப்பு - கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்.

கல்லூரியில் தமிழே கிடையாது, பாடமாக. தமிழ் படித்தது சினிமா பாடல்களில் மூலமாத்தான். நட்பு வட்டமும் எனக்கு தமிழ் இலக்கியம் பற்றி படிக்க வாப்பில்லாமல் பண்ணிவிட்டது. பின்பு பெங்களூர் வாழ்க்கை தொடங்கியது. கேட்கவா வேண்டும், புது இடம், புது சம்பளம் - வாழ்க்கையை படிக்கவே நேரம் போனது. பெரிசா ஒண்ணு பண்ணல.

இந்த மென்பொருள் துறையில் இருப்பவர்களுக்கேயான ஒரு வரம் எனக்கும் கிடைத்தது. அது நேரம். சும்மா இருக்க சம்பளம் கொடுப்பார்கள். என்ன செய்வதேன்றே தெரியாது. சும்மா ஆபீஸ் போக வேண்டியது, ID கார்டை swipe பண்ண வேண்டியது, சாப்பிட வேண்டியது என்று போனது. அந்த வரத்திலும் பெரிய வரம், இன்டெர்நெட்! தேடும் அனைத்தும் கிடைக்கும் சொர்க்கம். ஏதோ ஒரு தேடலின் போது அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" பற்றி படிக்க நேர்ந்தது. அதுவே என் ஆரம்பம்.

அதுவே, என் இலக்கிய ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்தது. பிறகு "பொன்னியின் செல்வன்" யாஹூ குரூப்-ல் இணைந்தது இன்னொரு பெரிய நிகழ்வு. பெரிய மனிதர்கள் இருக்கும் குழு, எண்ணென்னவோ பேசுவார்கள். அவ்வப்போது இந்த குழுவில் இருக்க எனக்கென்ன தகுதி இருக்குதென்று நினைத்ததுன்று.

ஆகவே, அடிச்சு சொல்லுவேன், கல்கியே என் தமிழ் இலக்கிய ஆர்வத்தை தூண்டியவர் என்று. அட ராமா சொல்லவந்தத மறந்துட்டேனே! புலிய புடிக்க போயி எலியா திரும்பி வந்தானாம் - அந்த கதையால போச்சு.

ஆதாகப்பட்டது எனக்கு வந்த தமிழ் ஆர்வம் என் மனைவிக்கும் வரட்டுமேண்ணு "பொன்னியின் செல்வன்" வாங்கித் தந்துள்ளேன். எதையும் திணிக்க எனக்கு உரிமையில்லை, பார்ப்போம்!

Image(151)

பி.கு :  தெரியுது சிலர் செருப்பை என் மேல வீச தயாரா இருக்கீங்கண்ணு.. யார் யாரோ என்ன என்னவோ எழுதுகிறார்கள், இவன் என்னடாண்ணா சும்மா இவன் கதை சொல்லராண்ணு.. இவன் பக்கமே இனி வார கூடாதுண்ணு நீங்க நினைக்கறது எனக்கு கேட்குது... ஹீஹீஹீ...மன்னிக்கவும், நான் ஏர்க்கானவே சொன்ன மாதிரி எனக்கு தமிழில் பெரிய எழுத்து திறமை ஏதும் கிடையாது. இப்போ தான் ஒண்ணாப்பு சேர்ந்த மாதிரி இருக்கு. +12 போன சொல்லி அனுப்புறேன், அப்போ திரும்ப வாங்க. நன்றி!

1 comment:

  1. நீங்களே ஒன்னாப்பு என்றால் நான் இன்னும் pre.k.g. கூட இல்லை, எனக்கும் தமிழ் ஆர்வம் உண்டு ஆனால் அமரர் கல்கியின் இலக்கிய தொகுப்புகளை நேரம் கிடைக்கும் போது படிப்பேன், இனி அதற்கென தனியாக நேரம் ஒதுக்கி அதிக அளவில் படிக்க ஆசை படுகிறேன், நன்றி.

    மேலும் உங்களுடைய ஜாதகம், திருமண பொருத்தம், எண் கணிதம் மற்றும் எதிர்காலம் பற்றி
    அறிந்து கொள்ள www.yourastrology.co.in
    என்ற இணையதளத்தை பாருங்கள் மிகவும் பயனாக இருக்கும்.

    ReplyDelete